ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்
மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஆதிக்கத்தை தங்களுடைய ஆப் ஸ்டோர்களில் பட்டியலிடப்படும் செயலிகளின் மீதும் காட்டுகின்றன அந்நிறுவனங்கள். டிஜிட்டல் தளத்தில் மேற்கூறிய இரண்டு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ஜப்பான். சமீபத்தில் தான் தங்களது ஏழாவது டிஜிட்டல் சந்தைப் போட்டி மாநாட்டை ஜப்பான் நடத்தி முடித்திருக்கிறது. இந்த மாநாட்டில் ஸ்மார்ட்போன் இயங்குதளங்களுக்கான சந்தையில் நிலவும் போட்டி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு இறுதி அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ஸ்மார்ட்போன் இயங்குதள சந்தையில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
ஜப்பானின் திட்டம் என்ன?
ஆப்பிளும் கூகுளும், தங்களுடைய ஆப் ஸ்டோர்களில் மூன்றாம் தர கட்டண சேவை சேவைக்கான அனுமதியை அளிக்க வேண்டும். அப்போது தான் பயனர்களுக்கான கட்டண சேவையில் தேர்வுகளை வழங்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேற்கூறிய இரண்டு டெக் நிறுவனங்களும், தங்கள் ஆப்-ஸ்டோர்களில் தங்களுடைய சொந்த செயலிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையைக் குறைக்க வேண்டும். மேலும், அவர்களுடைய இயங்குதளங்களிலிருந்து அவர்களது சொந்த செயலிகளை நீக்குவதற்கான உரிமையை பயனாளர்களுக்கு அளிக்க வேண்டும். ஆப்பிள் மற்றும் கூகுளைத் தவிர்த்து குறைந்த கட்டணத்துடன் கூடிய மூன்றாம் தர ஆப்-ஸ்டோரை மேம்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம், பிற செயலிகள் ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு செலுத்தும் கட்டணம் குறைந்து, அதன் சேவையையும் பயனர்களுக்கு குறைந்த விலையில் வழங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.