ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படத்தில் பதிவான 'கேள்விக்குறி' போன்ற அமைப்பு
விண்வெளியில் புதிதாக உருவாகி வரும் இரண்டு நட்சத்திரங்களை படம்பிடிக்கும் போது, 'கேள்விக்குறி' வடிவிலான அமைப்பு ஒன்றும் அதில் பதிவாகி விஞ்ஞானிகளிடம் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது. பூமியில் இருந்து 1470 ஒளியாண்டுகள் தொலைவில் வேலா நடத்திரக்கொத்தில், புதிதாக உருவாகி வரும் 'ஹெர்பிக்-ஹேரோ 46/47' என்ற நட்சத்திர இணையைப் படம் பிடித்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. புகைப்படத்தில் பிரம்மாண்டமாக இடம்பெற்றிருக்கும் அந்த நட்சத்திர இணைக்கு அருகே, மிகச் சிறிய அளவில் கேள்விக்குறி வடிவிலான அமைப்பு ஒன்று பதிவாகி இருக்கிறது. விண்வெளியில் புதைந்திருக்கும் இந்த கேள்விக்குறி என்னவாக இருக்கும் என விஞ்ஞானிகளே குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த அமைப்பு குறித்து மேலும் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே, அது என்னவென்று தெரியவரும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
கேள்விக்குறி வடிவிலான அமைப்பு:
பால்டிமோரில், ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் செயல்பாடுகளைக் கவனித்து வரும் ஸ்பேஸ் டெலஸ்கோப் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் பிரதிநிதி ஒருவர் இது குறித்து ஆங்கில வலைத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், "இது அமைப்பானது மிக தூரத்தில் இருக்ககக்கூடிய கேலக்ஸிக்களாக இருக்கலாம். அவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்த அமைப்பானது கண்டிப்பாக மிகவும் தூரத்தில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், இது போன்ற ஒரு அமைப்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் துறையைச் துணைப் பேராசிரியர் ஒருவரும், இரண்டு கேலக்ஸிகள் ஒன்றோடொன்று மோதி இது போன்ற அமைப்பு தென்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.