
ட்விட்டரில் தடை.. த்ரெட்ஸில் புதிய கணக்கைத் தொடங்கினார் ஜாக் ஸ்வீனி
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உபயோகத்திற்கான ஜெட்டை பொதுத் தளங்களில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பாட் மூலம் ட்ராக் செய்து, அந்த ஜெட் குறித்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் ஜாக் ஸ்வீனி என்பவர்.
இப்படி தன்னுடைய தனிப்பட்ட ஜெட் குறித்த தகவல்களை பொதுவில் பதிவிடுவது தனக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்த ட்விட்டர் கணக்கை முடக்கினார் எலான் மஸ்க். மேலும், அந்தக் கணக்கை உருவாக்கிய ஜாக் ஸ்வீனி மீதும் வழங்குத் தொடரவிருப்பதாக அப்போது எச்சரித்திருந்தார்.
தற்போது அந்த நபர், ட்விட்டரின் போட்டியாளரான த்ரெட்ஸில் இணைந்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட்டை பயணத் தகவல்களை அதில் பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த த்ரெட்ஸ் கணக்கை 47,000 போர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
த்ரெட்ஸ்
ட்விட்டருக்கு போட்டியாக வளர்ந்து வரும் த்ரெட்ஸ்:
தொடங்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், தற்போது 90 மில்லியன் பயனாளர்களைப் பெற்றிருக்கிறது த்ரெட்ஸ் வலைத்தளம்.
இந்த புதிய வலைத்தளத்தை ட்விட்டருக்குப் போட்டியாக பலரும் கருதி வரும் நிலையில், ட்விட்டரில் உள்ள குறுஞ்செய்தி வசதி, முழுமையான ப்ரௌஸரில் பயன்படுத்தும் வசதி ஆகிய சில முக்கிய வசதிகள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
ட்விட்டர் ஒரு அரசியல் களமாக இருக்கிறது என்றும், அரசியல் நிகழ்வுகள் சச்சரவுகள் அங்கு அரங்கேறுவதாகவும் தெரிவித்திருக்கும் இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மோசாரி, த்ரெட்ஸை இன்ஸ்டாகிராமைப் போல ஒரு பொழுதுபோக்குத் தளமாகவே தாங்கள் மேம்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தீவிரமான விஷயங்களை த்ரெட்ஸில் தாங்கள் ஊக்குவிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.