சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா-L1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோளானது தற்போது பெங்களூருவின் யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து, ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ. இந்த ஆதித்யா-L1 திட்டம் தான் சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கிறது. 2008-ல் முதன் முதலாக இந்தத் திட்டத்திற்கான யோசனை கூறப்பட்டு, 2016-17 நிதியாண்டில் சோதனை அடிப்படையில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சூரியனை ஆய்வு செய்ய, இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' திட்டம்:
பின்னர் 2019-ல், ஏவுதளுக்கான செலவினங்களைத் தவிர்த்து, ஆதித்யா-L1 திட்டத்திற்கு ரூ.378.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆதித்யா-L1 செயற்கைக்கோளை PSLV-XL ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் பூமிக்கும் சூரியனுக்கு இடையே உள்ள L1 புள்ளியில் ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி சூரியனை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. விண்வெளியின் இந்தப் பகுதியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதன் மூலம், எந்த தடையும் இன்றி அனைத்து நேரமும் இஸ்ரோவால் சூரியனை கண்காணிக்க முடியும். இதுவரை அமெரிக்காவின் நாசா மட்டுமே, சூரியனை ஆய்வு செய்வதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. நாசாவுடன் இணைந்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கின்றன.