சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக சந்திரயான் 3யை தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து பூமியின் நேரப்படி 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு ஆய்வுகளை சந்திரயான் 3யுடன் அனுப்பப்பட்டிருந்த அறிவியல் உபகரணங்களைக் கொண்டு மேற்கொண்டது இஸ்ரோ.
இந்நிலையில், சந்திரயான் 3யுடன் அனுப்பப்பட்டிருந்த அறிவியல் உபகரணம் ஒன்று, சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இரண்டு நாட்களில் செயல்படுவதை நிறுத்தியதாகத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ விஞ்ஞானிகளுள் ஒருவரான சந்தோஷ் வாடவாலே.
ஆல்ஃபா பார்டிகிள் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (APXS) என்ற அந்த அறிவியல் உபகரணம் ஏன் செயல்பாடுகளை சற்று நேரத்திற்கு மட்டும் நிறுத்தியது என்பது குறித்து ஆய்வு செய்தவர் சந்தோஷ் வாடவாலே.
சந்திரயான் 3
ஏன் செயல்பாட்டை நிறுத்தியது APXS அறிவியல் உபகரணம்?
சந்திரயான் 3 ஏவப்படுவதற்கு முன்பு இறுதிக் கட்டத்தின் போது ரோவரின் பாதுகாப்பிற்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக APXS அறிவியல் உபகரணமானது கட்டளைகளை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டு தரையிறங்கிய இரண்டு நாட்களுக்கு பிறகு செயல்பாட்டை நிறுத்தியிருக்கிறது.
ஆனால், இந்தப் பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டு அனைத்து விதமான ஆய்வுகளும் திட்டமிட்டபடியே முடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
நிலவின் இரவு நேரத்திற்குப் பிறகு செப்டம்பர் மாத இறுதியில் ரோவர் மற்றும் லேண்டர் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்காதது குறித்து பேசியபோது, "நிலவின் பகல் நேரத்தில் மட்டும் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
நிலவின் இரவுக்கு பிறகு லேண்டரும் ரோவரும் செயல்படாதது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்" எனத் தெரிவித்துள்ளார் அவர்.