சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?
வரும் ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான 'சந்திராயன்-3' மற்றும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான 'ஆதித்யா-L1' ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன. இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக சூரியனை மையமாக வைத்து செயல்படுத்தப்படும் திட்டம் ஆதித்யா-L1. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது இஸ்ரோவுக்கு ஒரு புதிய மைல்கலாக அமையும். இந்தத் திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் விண்கலமானது பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் லேக்ரேஞ்சு பாயிண்ட் 1 (L1)-ல் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை கண்காணிக்கும். ஏழு அறிவியல் கருவிகளைக் கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தை ஜூலை மாதம் இஸ்ரோ செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயன்-3:
2019-ல் செயல்படுத்தப்பட்ட சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அத்திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் விண்கலத்தில் ஒரு லேண்டர் அமைப்பு, ஒரு ப்ரெபல்ஷன் அமைப்பு மற்றும் ஒரு ரோவர் ஆகியவை சேர்த்து 3,900 கிலோ எடையைக் கொண்டிருக்கும். நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100கிமீ மேலே லேண்டர் அமைப்பும், ப்ரொபல்ஷன் அமைப்பும் தனித்தனியே பிரிந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.613 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் விண்கலமானது LVM3 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டா மையத்திலிருந்து, ஜூலை முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவரில் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக பல்வேறு அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாசாவின் கருவி ஒன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது.