Page Loader
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்

எழுதியவர் Prasanna Venkatesh
Jan 01, 2024
09:40 am

செய்தி முன்னோட்டம்

2024-ன் முதல் விண்வெளித் திட்டமாக 'XPoSat' (X-ray Polarimeter Satellite) திட்டத்தை இன்று செயல்படுத்தியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. இந்திய நேரப்படி சரியாக காலை 9.10 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV-C58 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது XPoSat செயற்கைக்கோள். விண்வெளி பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை ஆய்வு செய்யும் பொருட்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இதற்கு முன்னர் 2021ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா இதே போன்று விண்வெளிப் பொருட்களின் கதிர்வீச்சை ஆய்வு செய்வகற்கான பிரத்தியேக விண்வெளித் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாடாக அது போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது இந்தியா.

இஸ்ரோ

இஸ்ரோவின் XPoSat விண்வெளித் திட்டம்: 

இன்று விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் XPoSat செயற்கைகோளானது, POLIX (X-ray Polarimeter) மற்றும் XSPECT (X-ray Spectroscopy) ஆகிய இரண்டு அறிவியல் உபகரங்கணங்களைக் கொண்டிருக்கவிருக்கிறது. இந்த அறிவியல் உபகரணங்களின் உதவியுடன், விண்வெளிப் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் கண்காணித்து அதன் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். முக்கியமாக இந்த உபகரணங்களின் உதவியுடன் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைக் கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்துடன், அமெரிக்காவின் நாசாவிற்குப் பிறகு, கருந்துகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் நாடாக மாறவிருக்கிறது இந்தியா. மேலும், இந்தத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட XPoSat செயற்கைகோளானது ரூ.250 கோடி மதிப்பில் கட்டமைப்பட்டது குறிப்பிடத்தக்கது.