நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது. கிட்டத்தட்ட 126 நாட்கள் வரை பயணம் செய்திருக்கும் ஆதித்யா L1 விண்கலம், நாளை மாலை 4 மணியளவில், முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் உள்ள ஹேலோ சுற்றுவட்டப்பாதையை அடையும் எனத் தெரிவித்துள்ளது இஸ்ரோ. ஆதித்யா L1 விண்கலமானது அதனுடைய இலக்கை அடைவதற்கு முன்பாகவே, அதில் பொருத்தப்பட்டுள்ள சூரியனை ஆய்வு செய்வதற்குத் தேவையான அறிவியல் உபகரணங்களை இஸ்ரோ சோதனை செய்து பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் லெக்ராஞ்சு புள்ளி:
விண்வெளியில் குறிப்பிட்ட இரண்டு பொருட்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இரு பொருட்களின் ஈர்ப்பு விசையும் குறைவாக இருக்கும். அந்தப் பகுதியில் இடம் பெரும் பொருட்களானது, அந்த பிற விண்வெளிப் பொருட்களில் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாமல் ஒரே புள்ளியிலேயே நிலைத்திருக்க முடியும். அப்படியான புள்ளியையை லெக்ராஞ்சு புள்ளி என அழைக்கின்றனர். அப்படி பூமி மற்றும் சூரியனுக்கு இடையே இடம்பெற்றிருக்கும் முதலாம் லெக்ராஞ்சு புள்ளியிலேயே (L1), ஆதித்யா L1 விண்கலத்தை நிலைநிறுத்தவிருக்கிறது இஸ்ரோ. இந்தப் புள்ளியில் இருந்து, பிற கோள்களின் தடையின்றி அனைத்து நேரமும் ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களால் சூரியனை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டம் ஏன் முக்கியமானது?
சூரிய குடும்பத்தின் மூல நட்சத்திரமான சூரியனில் இருந்து சூரிய கதிர்கள் மற்றும் கொரோனால் மாஸ் எஜெக்ஷன் என பூமியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள் தோன்றக்கூடும். இந்த ஆபத்துக்களானது நேரடியாக பூமியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், நாம் பயன்படுத்தக்கூடிய மின்னணு சேவைகளுக்கு இதனால் பல்வேறு ஆபத்துக்கள் இருக்கின்றன. மேலும், சூரியனில் இருந்து வெளியாகும் திடீர் வெடிப்புகளால், நாம் தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு சேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே, சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களை உடனடியாக அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சூரியனைப் பற்றிய புரிதலை இத்திட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.