சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ
தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் சந்திரயான் 3யின் சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. கடந்த சில நாட்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட உயரக் குறைப்பு நடவடிக்கையின் பலனாக, நிலவில் இருந்து 173 கிமீ தூர சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரத் தொடங்கியது சந்திரயான்-3. தற்போது மற்றொரு நடவடிக்கையின் மூலம் அந்த உயரத்தை 163 கிமீ ஆகக் குறைத்திருக்கிறது இஸ்ரோ. இந்த நடவடிக்கையானது இன்று காலை 8.30 மணிக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும், தங்களது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு. இதனைத் தொடர்ந்து, ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூலை பிரிக்கும் நடவடிக்கையை, நாளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. மேலும், இத்துடன் சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது இஸ்ரோ.