சந்திரயான், ஆதித்யா திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா மற்றும் சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய ராக்கெட்டிலேயே இந்திய விண்வெளி வீரர்களை, பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பத்திரமாகத் தரையிறக்கத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்தத் திட்டத்தின் மூலம் விண்வெளி மனிதர்களை அனுப்பும் திறனை தாங்கள் கொண்டிருப்பதை உலகுக்கு பறைசாற்றவிருக்கிறது இந்தியா. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன், அந்தப் பிரதானத் திட்டத்திற்குப் பயன்படுத்தபடும் ராக்கெட் மற்றும் விண்வெளி வீரர்களுக்கான பாதுகாப்பு காப்சூல் உள்ளிட்டவற்றை சோதனை செய்யவிருக்கிறது இஸ்ரோ.
ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை:
ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை முயற்சியை வரும் அக்டோபக் 21ம் தேதியன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இதன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜித்தேந்தர் சிங் அறிவித்திருக்கிறார். TV-D1 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த சோதனை முயற்சியை, ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். இந்த முதற்கட்ட சோதனையின் கீழ், ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, பின்பு பூமியின் அதனை பாதுகாப்பாக வங்கக் கடலில் தரையிறக்கி, தொடர்ந்து அதனை மீட்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக வடிவமைக்கப்பட்டிரு்ககும் 'க்ரூ எஸ்கேப் சிஸ்டத்'தையும் இந்த சோதனை முயற்சியில் சோதனை செய்து பார்க்கவிருக்கிறது இஸ்ரோ.
திட்டத்தில் பயன்படுத்தப்படவிருக்கும் பெண் ரோபோ:
இந்த முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நிலையில், அடுத்த ஆண்டு இரண்டாம் கட்ட சோதனை முயற்சியையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது இஸ்ரோ. அந்த இரண்டாம் கட்ட சோதனை முயற்சியின் போது 'வயோமித்ரா' என்ற பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றையும் சோதனை ராக்கெட்டில் அனுப்பத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மனிதர்களின் மாதிரியாக இந்த ரோபோவைப் பயன்படுத்தவிருக்கின்றனர். 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோவானது ராக்கெட்டில் விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பயணிக்கவிருக்கும் மூன்று விண்வெளி வீரர்களுடன் இந்த ரோபோவும் பயணிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.