நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நிலவில் மேற்பரப்பில் தங்களுடைய வேலையைத் துவக்கின விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் ChaSTE கருவியின் உதவியுடன் நிலவின் தென்துருவ மேற்பரப்பு வெப்பத்தை அளவிட்டு, அதன் முடிவுகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தது இஸ்ரோ. தற்போது அதனைத் தொடர்ந்து, பிரஞ்யான் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் Laser-Induced Breakdown Spectroscope (LIBS) அறிவியல் உபகரணத்தின் உதவியுடன், நிலவின் தென்துருவ மேற்பரப்பில் இடம்பெற்றிருக்கும் வேதிப் பொருட்களின் இருப்பைக் கண்டறிந்திருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.
என்னென்ன வேதிப் பொருட்கள் நிலவின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டிருக்கின்றன?
LIBS உபகரணத்தின் உதவியுடன் நிலவின் மேற்பரப்பில், சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், ஆக்ஸிஜன் மற்றும் சிலிக்கான ஆகியவற்றின் இருப்பைக் கண்டறிந்திருக்கிறது இஸ்ரோ. இவற்றைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதற்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் பதிவிட்டிருக்கிறது இந்திய விண்வெளி அமைப்பு. தற்போது பிரஞ்யான் ரோவர் பயன்படுத்தி வரும் இந்த LIBS கருவியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் Laboratory for Electro-Optics Systems மையத்திலேயே உருவாக்கியிருக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்புகளுடன், நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் மட்டுமல்லாமல், நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ந்திருக்கும் முதல் நாடு என்ற பெயரையும் பெற்றிருக்கிறது இந்தியா.