இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுயசரிதை வெளியீடு நிறுத்தம், காரணம் என்ன?
இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய சுயசரிதையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குறித்து எழுதி இருந்ததாக சொல்லப்படும் கருத்துக்கள், சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சுயசரிதை வெளியிட்டை நிறுத்தியுள்ளார். 'நிலவை குடித்த சிங்கங்கள்' என்ற தலைப்பில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனது சுயசரிதையை எழுதி இருந்தார். அதில் அவர் எழுதியுள்ளதாக பரவிய பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கின. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த சுயசரிதியில் சோம்நாத் எழுதியிருந்ததாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுயசரிதையில் என்ன எழுதி இருந்தார் சோம்நாத்?
இஸ்ரோ தலைவராக இருந்த கிரன்குமாரின் ஓய்வுக்கு பின், அப்பதவிக்கு, சோம்நாத் மற்றும் சிவன் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதில் தனக்கு பதவி கிடைக்கும் என சோம்நாத் எதிர்பார்த்த நிலையில், சிவனுக்கு கிடைத்தது என சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இஸ்ரோ தலைவரான சிவன் தனது பதவிக்காலம் முடிந்தும், அதில் தொடர நினைத்ததாகவும், அடுத்தவர்களுக்கு வழி விடவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரோ தலைவராவதற்கு முன், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்த சிவன், இஸ்ரோ தலைவரான பிறகும் அப்பதவியில் தொடர நினைத்ததாக தனது சுயசரிதையில் சோம்நாத் எழுதியுள்ளதாக தெரிகிறது. சந்திராயன்-2 தோல்விக்கு மென்பொருள் கோளாறே காரணம் எனவும், பல்வேறு முக்கியமான சோதனைகளை சிவன் செய்யவில்லை எனவும் சோம்நாத் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சோமநாத் மற்றும் சிவன்
தனது சுயசரிதையில் இருந்த தகவல்கள் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார். இந்த சுயசரிதையில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை எனவும், மேலும் தனது வளர்ச்சியை தடுக்க சிவன் முயன்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவனிடம் கருத்து கேட்கப்பட்டபோது வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுத்த சிவன்,"இஸ்ரோவின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவெளியில் உள்ளதாகவும், தகவல் வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், தனக்கு இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை" எனவும் அவர் கூறினார். ஏற்கனவே சந்திராயன் 2 திட்டத்தில், மயில்சாமி அண்ணாதுரையை பரிந்துரைக்காத விவகாரத்தில், சிவன் மீது சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.