விளம்பரதாரர்களின் புறக்கணிப்பால் திவாலாகும் நிலையை நோக்கிச் செல்கிறதா எக்ஸ்?
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதில்லை என பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் முடிவெடுத்து அத்தளத்திலிருந்து விலகியிருக்கின்றன. இது எக்ஸூக்கு எந்த வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? முதலில் ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்தன? எக்ஸ் தளத்தில் அவ்வப்போது பயனாளர்களின் பதிவுகளில் மறுமொழி இடுவது எலான் மஸ்கின் வழக்கம். அப்படி, கடந்த மாதம் எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்ட யூத எதிர்ப்புக் கருத்தை ஆமோதிக்கும் விதமாக மறுமொழி அளித்தார் எலான் மஸ்க். இந்த மறுமொழியைத் தொடர்ந்தே பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் எக்ஸ் தளத்தில் விளம்பரம் செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கின்றன. சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம்.
எக்ஸின் வருவாய் மூலங்கள்:
44 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வாங்கப்பட்ட எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளமானது திவால் ஆகும் நிலையில் இல்லை. எனினும், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. எக்ஸின் முக்கியமான வருவாய் மூலமாக இருப்பவை அத்தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாகவே வருகிறது. அதாவது, எக்ஸின் 90% வருவாய் அதன் விளம்பரங்கள் மூலமே பெறப்படுகிறது. இதனை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எலான் மஸ்கே உறுதிப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே எலான் மஸ்க் எக்ஸை கைப்பற்றிய பிறகு அதன் விளம்பர வருவாய் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போது எலான் மஸ்கின் செயல்பாடுகளின் காரணமாக அது இன்னும் மோசமாக நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.
திவாலாகும் நிலைக்குச் செல்லுமா எக்ஸ்?
எக்ஸ் தளத்தில் விளம்பரங்களை வெளியிடாமல் புறக்கணிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் முடிவு எக்ஸை திவாலாகும் நிலைக்குக் கூட இட்டுச் செல்லலாம் என அச்செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. எக்ஸ் நிறுவனத்திலிரு்நது கசிந்த தகவல்களின்படி, அந்நிறுவனத்தின் வருவாயானது 2022ம் ஆண்டு 4 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், அது இந்தாண்டு 1.9 பில்லியன் டாலர்களாகக் குறையலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்திற்கு 13 பில்லியன் டாலர்கள் கடன் இருக்கும் நிலையில், அதற்கு ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர்கள் வட்டி கட்ட வேண்டும். இத்துடன், எக்ஸ் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் அந்நிறுவனம் வழங்க வேண்டும். இதெல்லாம் அத்தளத்தின் முக்கிய செலவுகளாக இருக்கின்றது.
பிற வருவாய் மூலங்களால் சமன் முடியுமா?
விளம்பர வருவாயைத் தவிர்த்து எக்ஸின் முக்கிய வருவாயாக இருப்பது பயனாளர்களின் சந்தா மூலம் கிடைக்கும் வருவாய் தான். ஆனால், விளம்பரதாரர்கள் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் அளவிற்கு பயனாளர்களின் சந்தா வருவாய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸை வெறும் குறும்பதிவுத் தளமாக மட்டுமில்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரு இடத்தில் வழங்கும் வகையிலான ஆல்-இன்-ஆல் சேவையாக உருவாக்கவதையே முதல் திட்டமாகக் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். அப்படி இருக்கும் பட்சத்தில், எக்ஸ் வழங்கவிருக்கும் பிற சேவைகளின் வழியே வருவாய் ஈட்டவும் வழி இருக்கிறது. ஆனால், அவற்றாலும் விளம்பரதாரர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பு முடியாது என்பதே உண்மை. எனவே, விளம்பர வருவாயைப் பெருக்கவும், இருக்கும் விளம்பரதாரர்களைத் தக்கவைக்கவுமான வழிகளை யோசிப்பது தான் எக்ஸை தக்கவைக்க சிறந்த வழி.