டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்?
டெஸ்லாவின் நிதியைக் கொண்டு தனி 'கண்ணாடி வீடு' ஒன்று, டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 'ப்ராஜெக்ட் 42' என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினில் இந்தக் கண்ணாடி வீடு கட்டப்பட்டு வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வீடானது டெஸ்லாவின் ஆஸ்டின் நகர தலைமை அலுவலகத்தின் அருகில் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்தக் கண்ணாடி வீட்டிற்கு டெஸ்லாவின் நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என மேன்ஹாட்டனைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்களும், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்ஸாவின் நிதி பயன்படுத்தப்பட்டதா?
முன்னதாக கடந்த ஜூலை மாதமே, இந்த 'ப்ராஜெக்ட் 42'விற்கு டெஸ்லாவின் நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்றும், அதில் எலான் மஸ்க்கின் தலையீடு இருக்கிறதா என்றும் நிறுவனத்திற்குள்ளேயே விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்கள். தற்போது கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கிறது டெஸ்லா. அம்மாகாணத்தின் அதீத விதிமுறைகள் மற்றும் வரிகள் காரணமாக டெக்சாஸிற்கு டெஸ்லாவின் தலைமையகத்தை மாற்ற எலான் மஸ்க் பரிசீலனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு அருகே 50,000 டாலர்கள் வாடகை வீடு ஒன்றிலேயே தான் குடியிருந்து வருவதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.