RCS குறுஞ்செய்தி சேவையை ஐபோனில் கொடுக்கத் திட்டமிடும் ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 2024ம் ஆண்டு முதல் தங்களுடைய ஐபோன்களில் RCS (Rich Communication Service) சேவையை வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
RCS என்பது காலம் காலமாக, நாம் மொபைல்களில் பயன்படுத்தி வரும் SMS மற்றும் MMS சேவைகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி சேவையாகும்.
2007ம் ஆண்டு முதலே இந்த RCS சேவையை உருவாக்கி மேம்படுத்தி வருகிறது உலகளாவிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான GSMA.
தற்போது இந்தியாவில் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் RCS சேவையை வழங்கி வருகின்றன மேலும், பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த RCS சேவை பயன்பாட்டில் இருக்கிறது.
ஆப்பிள்
எதற்காக இந்த RCS உருவாக்கப்பட்டது?
வாட்ஸ்அப் போன்ற குறுஞ்செய்தி சேவைகளுக்கு போட்டியாக, அடிப்படையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பான ஒரு குறுஞ்செய்தி சேவையின் தேவையை வேண்டியே இந்த RCS உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
RCS சேவையைப் பயன்படுத்தும் போது, நமது ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படையான குறுஞ்செய்தி சேவையிலேயே வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் பெரும்பாலான பயனாளர் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நமக்கு வழங்கப்படும்.
தரம் மிக்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் RCS சேவையைப் பயன்படுத்தி பிறருக்கு நாம் அனுப்ப முடியும். மேலும், SMS போல அல்லாமல், செல்லுலார் டேட்டா மட்டுமின்றி வைபை கொண்டு RCS சேவை மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பு/பெற முடியும்.
ஐபோன்
ஆப்பிள் ஏன் இந்த வசதியை ஐபோன்களில் வழங்கவில்லை:
ஆப்பிள் ஏற்கனவே SMS-க்கு மாற்றான பாதுகாப்பான RCS போன்ற குறுஞ்செய்தி சேவையாக ஐமெஸேஜ் (iMessage) சேவையைக் கொண்டிருந்தது. இதன் மூலம் ஆப்பிள் பயனாளர்களிடையே பாதுகாப்பான தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடிந்தது.
ஆனால், ஆண்ட்ராய்டில் இருந்து ஆப்பிளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப முற்பட்டால் அது SMS சேவைய மூலமாகவே அனுப்பப்படும். SMS என்பது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பில்லாத குறுஞ்செய்தி சேவையாகும்.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், தொடர்ந்து கூகுள் நிறுவனம் வலியுறுத்தி வருதையும் தொடர்ந்து RCS சேவையை ஐபோன்களிலும் வழங்க முன்வந்திருக்கிறது ஆப்பிள்.