
23 வயது இந்திய இளைஞருக்கு மெட்டாவில் ₹3.6 கோடி சம்பளத்தில் வேலை; மனோஜ் டூமுவின் வெற்றிப் பயணம்
செய்தி முன்னோட்டம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பொறியாளர் மனோஜ் டூமு, மெட்டாவில் இயந்திர கற்றல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிய ஒரு கனவு வேலையைப் பெற்றுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ₹3.6 கோடி (சுமார் $400,000) சம்பளத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அமேசான் நிறுவனத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள மனோஜ், இனி மெட்டாவின் விளம்பர ஆராய்ச்சி குழுவில் சேர உள்ளார். பிசினஸ் இன்சைடர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மனோஜ் தனது பயணத்தையும், அமேசானில் இருந்து விலகி மெட்டாவுக்கு மாறியதற்கான காரணங்களையும் விளக்கினார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திர கற்றல் துறையில் வேகமாக ஏற்படும் மாற்றங்களே, மேலும் சவாலான பங்கைத் தேடத் தன்னைத் தூண்டியதாக அவர் கூறினார்.
இன்டர்ன்ஷிப்
இன்டர்ன்ஷிப்களில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
இந்தத் துறை, மனிதர்களின் முடிவுகளைச் சார்ந்திருந்த பாரம்பரிய முறைகளில் இருந்து, தானியங்கி கற்றலுக்கு உதவும் செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களால் இயங்கும் ஆழ்ந்த கற்றல் (deep learning) மாதிரிகளுக்கு மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இளம் தொழில் வல்லுநர்களுக்கு அறிவுரை வழங்கிய மனோஜ், மாணவர்கள் கல்லூரி படிக்கும்போதே இன்டர்ன்ஷிப்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் கிடைத்தாலும், ஏஐ மற்றும் இயந்திர கற்றல் துறையில் அத்தியாவசிய அனுபவத்தைப் பெற இன்டர்ன்ஷிப்கள் உதவுவதாக அவர் கூறினார். தொடக்கத்தில் சம்பளத்தை விட திறன்களை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதுவே எதிர்காலத்தில் அதிக சம்பளம் கொண்ட வேலைகளைப் பெற உதவும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.