AI GPU தொழில்நுட்பத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் இந்தியா: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்திய செயற்கை நுண்ணறிவு மிஷனை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மத்திய அரசு வெளியிட உள்ளது. இதனால், உள்நாட்டு தொழில்துறை இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கான கணினி சக்தியைப் பெற முடியுமென மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, மத்திய அரசு 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை (GPU) ஒரு பொது-தனியார் கூட்டாண்மையின் கீழ் வாங்கவுள்ளது. இதனால் தொழில்துறையின் செயல்திறன் ஒரு பெரிய வளர்ச்சியை அடைய பயன்படுத்தப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குளோபல் இந்தியா ஏஐ உச்சிமாநாடு
குளோபல் இந்தியா ஏஐ உச்சிமாநாடு 2024 இன் தொடக்க அமர்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "எங்களிடம் ஒரு ஏ.ஐ கண்டுபிடிப்பு மையம், ஸ்டார்ட்அப்களின் முயற்சிகளுக்கு அதிக மதிப்பை சேர்க்கக்கூடிய உயர்தர தரவுத் தொகுப்புகள் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு பொருத்தமான பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சி ஆகியவையும் இருக்கும்"என்று கூறினார். தொடர்ந்து,"நவீன தொழில்நுட்பம் விலை உயர்ந்ததாகி வருகிறது, பல பகுதிகளில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில பெரிய தொழில்நுட்பங்களின் கைகளில் அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பொதுவான புரிதல் உள்ளது" என்றார். "சமீபத்திய தேர்தலில், தவறான தகவல் அச்சுறுத்தலை நாங்கள் கண்டோம், இது AI-இன் சக்தியால் பெருக்கப்பட்டது. முழு உலகமும் இதை அனுபவித்திருக்கிறது மற்றும் அதே அச்சுறுத்தல்களை உணர்கிறது" என்றார்.