இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்; வரலாறும் பின்னணியும்
இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23, 2024) அன்று கொண்டாடுகிறது. இந்தியா தேசிய விண்வெளி தினத்தை "நிலவை தொடும் போது உயிர்களை தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா" என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய விண்வெளி தினம் - 2024இன் கொண்டாட்டங்கள் இஸ்ரோ இணையதளம் மற்றும் இஸ்ரோ யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்த நிகழ்வில் "ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்" என்று பெயரிடப்பட்ட மொபைல் கண்காட்சிகள் இடம்பெறும். அவை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும். இஸ்ரோவின் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் முன்னோடி விண்வெளிப் பணிகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
விக்ரம் லேண்டர் நிலவைத் திட்ட வரலாறு
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா கொண்டாடும் முதல் தேசிய விண்வெளி தினம் இதுவாகும். இதன் பின்னணி இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு இதே நாளில் தான் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி புள்ளி என பெயரிடப்பட்டது. இதன் மூலம், நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடவும், நமது உலகத்தை வடிவமைப்பதில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும் இதை தேசிய விண்வெளி தினமாக இந்திய அரசு அறிவித்தது.