Page Loader
AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!
ஆன்லைன் மோசடியிலும் அதிகரிக்கும் AI பயன்பாடு

AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!

எழுதியவர் Prasanna Venkatesh
May 02, 2023
09:28 am

செய்தி முன்னோட்டம்

இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் ஏழு நாடுகளில் 7,058 ஆன்லைன் பயனர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் 1,010 இந்திய பயனர்களும் அடக்கம். இவர்களிடம் AI உதவியுடன் செய்யப்படும் குரல்வழி ஆன்லைன் மோசடிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. இந்திய பயனர்களில் 47% பேர் குரல்வழி ஆன்லைன் மோசடியால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். AI உதவியுடன் ஒருவரின் குரலை அப்படியே நகலெடுத்து, அதன் மூலம் குறிப்பிட்ட நபர் போல பேசி ஏமாற்றி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள்.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடியிலும் AI பயன்பாடு: 

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட இந்திய பயனர்களில் 87% பேர் இது போன்ற ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு நபர் பேசிய 3 நொடி நேர ஆடியோ கிடைத்தால் போதும், AI-க்களைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட நபரைப் போலவே ஆடியோவை உருவாக்க முடியுமாம். மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 69% இந்தியர்களின் தங்களுக்கு நெருக்கமானவர்களின் குரலுக்கும், AI-யால் உருவாக்கப்பட்ட அதே போன்ற குரலுக்கு இடையே வித்தியாசம் காண முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். "தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு தான். ஆனால், அவற்றை அழிவுக்கும் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அதைத் தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்", எனத் தெரிவித்துள்ளார் மாக்கஃபியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்டீவ் கிராப்மன்.