இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம்
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எலான் மஸ்க் தனது வாழ்நாள் இலக்கான செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தோடு தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஒரு வருடமாக, அங்கு சென்றால் என்ன நடக்கும் என்ற வேலைகளையும் அவர் முடுக்கிவிட்டுள்ளார். 53 வயதான எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்படும் நகரத்தின் வடிவமைப்பு மற்றும் விவரங்களைத் ஆராயுமாறு SpaceX ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்பட இருக்கும் குவிமாட வாழ்விடங்களுக்கான திட்டங்களை வரைய அவர் ஒரு குழுவை நியமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ஏற்ற விண்வெளி உடைகளை உருவாக்க இன்னொரு குழு பணியாற்றி வருகிறது.
இன்னும் சுமார் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்க திட்டம்
அதே நேரத்தில் ஒரு மருத்துவக் குழு அங்கு மனிதர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறது. மேலும், தனது விந்தணுவை செவ்வாய் கிரகத்தில் விதைப்பதற்கு எலான் மஸ்க் முன்வந்துள்ளார். ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த முன்முயற்சிகள், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான உறுதியான திட்டமிடலை நோக்கி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு பேசும் போது செவ்வாய் கிரகத்தில் தன்னிறைவான ஒரு நாகரிகத்தை உருவாக்க 40 முதல் 100 ஆண்டுகள் ஆகும் என்று எலான் மஸ்க் கூறி இருந்தார். ஆனால், இன்னும் சுமார் 20 ஆண்டுகளில் 1 மில்லியன் மக்கள் செவ்வாய் கிரகத்தில் வசிப்பார்கள் என்று எலான் மஸ்க் தற்போது SpaceX ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறார்.