கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய ஆண்ட்ராய்டு வசதி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்திற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட அனைத்து போன்களிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதியை ஆன் செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Settings-க்குச் சென்று, அதில் Safety and Emergency பிரிவைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் Earthquake Alerts என்பதனைக் கிளிக் செய்து, பின்னர் அதனை ஆன் செய்ய வேண்டும்.பெரும்பலான ஸ்மார்ட்போன்களில் அடிப்படையிலேயே ஆன் செய்யப்பட்டிருக்கும். மேலும், இந்த வசதியின் மூலம் பயன்பெற வேண்டுமென்றால், நம்முடைய ஸ்மார்ட்போனின் Location வசதியானது எப்போதும் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி செயல்படுகிறது இந்த வசதி?
அமெரிக்காவில் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கையை வழங்க Shakealert என்ற அமைப்புடன் கைகோர்த்திருக்கிறது கூகுள். ஆனால், பிற நாடுகளில் இந்த வசதியை அந்நாட்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்டே வழங்கவிருக்கிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் இருக்கும் அக்சிலரோமீட்டர் தகவல்களைச் சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா இல்லையா என்பது குறித்த எச்சரிக்கையை வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். ஒரு இடத்தில் 4.5 ரிக்டர் அல்லது அதற்கும் மேற்கபட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் போதே, அது குறித்த எச்சரிக்கை வழங்கப்படும் என தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.