லட்சங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி.. தற்காத்துக் கொள்வது எப்படி?
சமீபகாலமாக புதிய வகையான ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடிக்கு இலக்காகுபவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களும், நல்ல வேலையில் இருப்பவர்களே. பணம் என்பது எப்போதுமே நமது பேராசையை தூண்டும் விஷயமாகவே இருந்து வருகிறது. கூடுதல் பணம், கூடுதல் லாபம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறியே மேற்கூறிய புதிய வகை மோசடியில், மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விதமான ஆன்லைன் மோசடிகள் குறித்து தொடர்ந்து செய்திகளில் பேசப்படும் போதும், இவ்வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், அதற்கு பலரும் இலக்காவதும் தொடர் கதையாகவே இருக்கிறது. 'டாஸ்க் மோசடி' எனக் குறிப்பிடப்படும் இந்த ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப்படுபவர் தாமாகவே முன்வந்து தங்களது பணத்தை மோசடி நபர்களிடம் அளிக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான விஷயம்.
டாஸ்க் மோசடி (Task Scam):
இந்த மோசடியின் பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போலவே, ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து அதற்கு பணம் தருவது போல் தந்து நம்மை நம்பவைத்தப் பிறகு, நம்மிடமிருந்து அதிகளவிலான பணத்தைக் கறந்து ஏமாற்றிச் சென்று விடுவார்கள். முதலில் ஏதாவது ஒரு வகையில் நம்மை மோசடி நபர்கள் தொடர்பு கொள்வார்கள். ஒரு சிறிய டாஸ்க் செய்தால் போது, அதற்கு குறிப்பிட்ட தொகையை நாங்கள் தருவோம், இதனை பகுதிநேர வேலையாகவும் செய்யலாம் எனக் கூறுவார்கள். மேலும், அதற்கு முதலில் சிறிய தொகை ஒன்றை செலுத்த வேண்டும் எனக் கூறி நம்மிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் கொடுக்கும் 'டாஸ்க்கை' வெற்றிகரமாக நாம் செய்து முடித்த பின்பு, நாம் கொடுத்த தொகையை விட இரு மடங்கு தொகையை நமக்குத் திருப்பியளிப்பார்கள்.
ஏமாற்றம்:
இப்படி திருப்பியளிப்பது நம்முடைய நம்பிக்கையைப் பெறுவதற்காக மட்டுமே. பின்பு அதனை விட கூடுதல் தொகையை நாம் செலுத்த, அதனை மேலும் கூடுதலான தொகையாக நமக்குத் திருப்பித் தருவார்கள். இப்படி சில பரிமாற்றங்கள் நிகழ்ந்த பிறகு, நாம் அந்த மோசடி நபர்களின் செயல்பாடுகளை முழுமையாக நம்பத் தொடங்கி விடுவோம். அப்போது தான், உண்மையான மோசடியையே அவர்கள் தொடங்குவார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்தால் அதிகளவிலான லாபம் பார்க்க முடியும் என்றும், அதற்கு நாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான காரணம் ஒன்றையும் கூறுவார்கள். நாமும் நம்பி பணத்தை முதலீடு செய்யத் தொடங்குவோம், இன்னும் கொஞ்சம் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும் என நமது ஆசையைத் தூண்டுவார்கள்.
மோசடி:
நாமும் லாபத்தைப் பார்க்கும் ஆசையில் நம் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் அதில் முதலீடு செய்யத் தொடங்குவோம். இடையிடையே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உடையாமல் இருக்க, நமது கணக்கில் பண இருப்பு இருப்பது போல காட்டி மயக்குவார்கள். இறுதியில் நம்முடைய தொடர்புகளைக் கத்தரித்து விட்டு ஏமாற்றிச் சென்றுவிடுவார்கள். இது தான் அந்த மோசடி நபர்கள் பயன்படுத்தும் ஒரே ஃபார்முலாவாக தற்சமயம் இருந்து வருகிறது. இவை குறித்து செய்திகளில் படிக்க நேர்ந்தாலும், நிஜத்தில் அவர்களிடம் படித்தவர்களே ஏமாந்து விடுகிறார்கள். சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இரு மென்பொருள் பொறியாளர்கள் இந்த வகை மோசடியில் சிக்கி 95 லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார்கள்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
முன்பின் தெரியாதவர்களிடம் நம்முடைய எந்த விதமான தகவல்களையும் கொடுக்கக்கூடாது. முன்பின் அறியாதவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள முயன்றாலும், எச்சரிக்கையுடனே அவர்களை அணுக வேண்டும். நமக்குத் தெரியாதவர்களிடம் எந்த விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது, பணப்பரிவர்த்தனை வைத்துக் கொள்ளக்கூடாது. முக்கியமாக, ஆன்லைன் மூலமாக யார் எந்தவொரு லிங்க்கை அணுப்பினாலும் அதனை க்ளிக் செய்யக்கூடாது. மேற்கூறியது போல நாம் பாதிக்கப்பட்டு புகார் அளித்தாலும், நம்முடைய பணம் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை. மோசடிகள் நிறைந்த டிஜிட்டல் உலகில் நம்முடைய பணத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு என்பதை மட்டும் மறந்து விடாமல் இருப்பது சிறப்பு.