இந்தியாவில் வெளியானது 'ஹானர் பேடு X9' டேப்லட்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது ஹானர் பேடு X8 டேப்லட் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனான பேடு X9 மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஹானர் நிறுவனம். முந்தைய மாடலை விட பெரிய டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டு புதிய பேடு X9-ஐ வெளியிட்டிருக்கிறது ஹானர். 11.5 இன்ச் LCD டிஸ்பிளே, 7,250mAh பேட்டரி, 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளுடன் புதிய பேடு X9-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹானர். ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அமேசான் தளத்தின் மூலம் இதன் விற்பனை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த டேப்லட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.500 தள்ளுபடியும், டேப்லட் ஃப்ளப் கவரை இலவசமாக வழங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஹானர்.
ஹானர் பேடு X9: ப்ராசஸர் மற்றும் விலை
பேடு X8 ஆனது கடந்த ஆண்டு மீடியாடெக் ஹீலியோ G80 ப்ராசஸருடன் வெளியான நிலையில், புதிய பேடு X9-ஐ குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸருடன் வெளியிட்டிருக்கிறது ஹானர். ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட மேஜிக்யுஐ 7.1 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது பேடு X9. டேப்லட்டின் இரண்டு பக்கமும் 5MP கேமாராக்களையே கொடுத்திருக்கிறது ஹானர். 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட இந்த டேப்லட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 13 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். டைப் சி, வை-பை மற்றும் ப்ளூடூத் 5.1 ஆகிய கனெக்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ரூ.14,499 விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த புதிய ஹானர் பேடு X9 டேப்லட்.