தொழில்நுட்ப உலகில் புரட்சி; புதிய குவாண்டம் இணையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்
பிரிட்டனின் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஒரு பாதுகாப்பான குவாண்டம் இணையத்தை உருவாக்குவதற்கான புதிய குவாண்டம் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் அதி-பாதுகாப்பான இணையத்தை கொண்டிருப்பதாக குவாண்டம் இணையத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த குவாண்டம் நெட்வொர்க்குகள் (IQN) மையத்தை தொடங்கியுள்ளது. பிரிட்டன் அரசாங்கம் இதற்கு நிதி முதலீட்டை வழங்குகிறது. இந்த மையம் மட்டுமல்லாது இது போன்ற மேலும் நான்கு புதிய குவாண்டம் மையங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 160 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளது. எதிர்காலத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பங்களில் பிரிட்டன் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குவாண்டம் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்
குவாண்டம் தொழில்நுட்பத்தின் மூலம் அணுக்கள் மற்றும் துணை அணுத் துகள்களின் தனித்துவமான பண்புகளைப் பயன்படுத்தி தற்போதுள்ள, வழக்கமான தொழில்நுட்பங்களால் சாத்தியமில்லாத செயல்பாடுகளை அடைய முடியும். இயற்கையில் சிக்கலானதாக இருந்தாலும், குவாண்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் நமது அன்றாட வாழ்வின் பல அம்சங்களை புரட்சிகரமாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஹெரியட்-வாட்டில் IQN மையத்தை வழிநடத்தும் பேராசிரியர் ஜெரால்ட் புல்லர் இது குறித்து கூறுகையில், "குவாண்டம் இன்று நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட பதிப்பைப் போன்றது. இது வழக்கமான தொழில்நுட்பத்துடன் கற்பனை செய்ய முடியாத வழிகளில் சிக்கல்களைத் தீர்க்கவும் தரவைப் பாதுகாக்கவும் அனுமதிக்கிறது. இது மருந்து ஆராய்ச்சி முதல் அற்புதமான புதிய பொருட்கள் மேம்பாடு வரை அனைத்திலும் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்." என்று கூறினார்.