LOADING...
'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு
X நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது

'Grok AI' மூலம் உருவாக்கப்படும் ஆபாச படங்கள் விவகாரம்; எக்ஸ் தளத்திடம் கூடுதல் விளக்கம் கோரும் மத்திய அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

எக்ஸ் (X) சமூக வலைதளத்தின் அங்கமான 'Grok' செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை பயன்படுத்தி, பெண்களின் ஆபாசமான மற்றும் போலியான புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் மத்திய அரசு விரிவான விளக்கம் கோரியுள்ளது. கடந்த ஜனவரி 2-ம் தேதி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) எக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீஸில், இத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கு எக்ஸ் நிறுவனம் நீண்ட விளக்க கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில், இந்திய சட்டங்களை மதிப்பதாகவும், ஆபாசமான பதிவுகளை நீக்கக் கடுமையான கொள்கைகளை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், எக்ஸ் அளித்த இந்த பதில் "திருப்திகரமாக இல்லை" என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய தகவல்கள்

முக்கியத் தகவல்கள் விடுபடல்

ஆபாசமான உள்ளடக்கங்கள் மீது எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள் குறித்த தெளிவான விபரங்கள் எக்ஸ் அளித்த பதிலில் இடம்பெறவில்லை. குறிப்பாக, 'Grok AI' தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள 'Action Taken Report' (ATR) போதுமானதாக இல்லை என அரசு கருதுகிறது.

எச்சரிக்கை

மத்திய அரசின் சட்ட ரீதியான எச்சரிக்கை

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 79-ன் கீழ் சமூக வலைதளங்களுக்கு வழங்கப்படும் 'பாதுகாப்பு விலக்கு' (Safe Harbour) என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எக்ஸ் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், அந்த பாதுகாப்பு நீக்கப்படும் என்றும், இந்திய சட்டங்களின்படி கிரிமினல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், ஜெர்மனி மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் "பாலியல் துன்புறுத்தலின் தொழிற்சாலையாக" மாறிவிடக் கூடாது என்பதில் உலக நாடுகள் உறுதியாக உள்ளன.

Advertisement