சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு
செய்தி முன்னோட்டம்
உலகளவில் தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்திய மக்களின் தகவல்களை ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு, புதிய சைபர் கருவிகளை வெளியிட்டிருக்கிறது இந்திய அரசு.
இதற்காகவே மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சைபர் ஸ்வட்ச் கேந்திரா என்ற புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
நமது கணினி மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து மால்வேர்களை நீக்குவதற்கான கருவிகளை தங்களது அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கியிருக்கிறது இந்த அமைப்பு.
இந்தக் கருவிகளை csk.gov.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று இந்திய மக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்தக் கருவிகள் அனைத்தையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சைபர் பாதுகாப்பு
மால்வேரை நீக்க இலவசக் கருவிகள்:
விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும் மால்வேர்கள் மற்றும் பாட்களை நீக்க, இ-ஸ்கேன் ஆண்டிவைரஸ், K7 செக்யூரிட்டி மற்றும் க்விக் ஹீல் ஆகிய கருவிகளை தங்கள் வலைத்தளத்தில் வழங்கியிருக்கிறது மேற்கூறிய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பு.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பாதுகாக்க, M-காவாச் 2 மற்றும் இ-ஸ்கேன் ஆண்டிவைரஸ் ஆகிய கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
யுஎஸ்பி மற்றும் எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் உள்ளிட்ட கருவிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த யுஎஸ்பி பிரதிரோத் என்ற கருவி வழங்கப்பட்டிருக்கிறது.
கூகுள் க்ரோம் போன்ற உலாவிகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்க ப்ரௌசர் JSகார்டு என்ற உலாவி நீட்டிப்புகளை ஃபையர் ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் ஆகிய உலாவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.