தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள்
உலகின் பல நாடுகளில் இயங்குதள சந்தையில் பெரும்பான்மையான சந்தைப் பங்குகளைக் கொண்டு கோலோச்சி வருகின்றன கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள். இயங்குதள சந்தையில் நிலவும் போட்டியின்மை காரணமாக, மேற்கூறிய இரு நிறுவனங்களும் தங்களுடய இயங்குதளங்களில் விருப்பத்திற்கு கட்டணம் விதிப்பது, விதிமுறைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கூறிய நிறுவனங்கள் மீது பல நாடுகளைச் சேர்ந்த சந்தைப்போட்டி ஒழுங்குமுறை ஆணையங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும், கூகுள் நிறுவனம் சந்தையில் நிலவும் போட்டியின்மையை தங்களுக்கு சாதகமாக தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி அந்நிறுவத்தின் மீது இந்திய மதிப்பில் ரூ.1,300 கோடி அபராதம் விதித்தது இந்திய சந்தைப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம்.
உச்சநீதிமன்றத்தில் வழங்கு:
மேலும், தங்கள் பிளே ஸ்டோரில் கூகுள் விதித்திருக்கும் பிற விதிமுறைகள் மற்றும் தடைகளை நீக்கக்கோரி 10 வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது சந்தைப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம். இது குறித்து தீர்ப்பாயத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம், சந்தைப் போட்டி ஆணையத்தின் நடவடிக்கைகளை ஆமோதித்த தீர்ப்பாயம், போட்டி ஆணையம் விதித்திந்த 10 வழிகாட்டுதல்களில் நான்கை மட்டும் நீக்கி பிற வழிகாட்டல்களை பின்பற்றக் கோரி உத்தரவிட்டிருந்தது தீர்ப்பாயம். அதனைத் தொடர்ந்து போட்டி ஆணையத்தின் வழிகாட்டுதல்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது கூகுள். மேலும், தாங்கள் சந்தையில் நிலவும் போட்டியின்மையை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தவில்லை எனவும், தங்களுடைய வணிக செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவும் தற்போது உச்சநீதிமன்றத்தை கூகுள் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.