புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் 'மேடு பை கூகுள்' நிகழ்வை இன்று நடத்துகிறது கூகுள்
சாம்சங் மற்றும் ஆப்பிளைத் தொடர்ந்து தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களை வெளியிடும் 'மேடு பை கூகுள்' வருடாந்திர நிகழ்வை இன்று (அக்டோபர் 4) நடத்தவிருக்கிறது கூகுள். ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை இந்த வருடாந்திர நிகழ்வின் மூலமே வெளியிடுவதை கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாக்கியிருக்கிறது அந்நிறுவனம். இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது கூகுளின் 'மேடு பை கூகுள்' நிகழ்வு. இன்றைய நிகழ்வில், கூகுளிடமிருந்து நாம் டெக் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்க்கும் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன், பிக்சல் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிச்கல் பட்ஸ் ப்ரோ ஹெட்போன்கள் உள்ளிட்டவற்றை கூகுள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 8 சீரிஸ்:
வழக்கம் போல பிக்சல் 8 சீரிஸின் கீழ், பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கூகுளின் சொந்த தயாரிப்பான புதிய டென்சார் G3 சிப்பையே புதிய பிக்சல் போன்களில் பயன்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பலவற்றை கடந்த மே மாதம் தொடங்கி அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள். எனவே, இந்தப் புதிய மின்னணு சாதனங்களிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான பிக்சல் 7ஐ விட சற்றுக் கூடுதலான விலையில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் என்ன விலையில் வெளியாகிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.