உங்கள் பழைய ஜிமெயில் Id-யை மாற்றிக்கொள்ளலாம்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு பெரிய குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள ஜிமெயில் முகவரியை (Gmail ID) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிமெயில் சேவையில், இதுவரை ஒருமுறை உருவாக்கிய முகவரியை மாற்ற முடியாது என்ற நிலை இருந்தது. தற்போது இந்தத் தடையை நீக்கி, புதிய முகவரியை பெற்றுக்கொள்ளும் வசதியை கூகுள் CEO சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
More details here: https://t.co/9ET1jVcWpP
— Sundar Pichai (@sundarpichai) March 31, 2026
பழைய முகவரி
சுந்தர் பிச்சை எக்ஸ் (X) பதிவு
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, "2004-ஆம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டுதான், ஆனால் உங்கள் ஜிமெயில் முகவரி அதே ஆண்டிலேயே தேங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். பயனர்கள் தங்களது பழைய மற்றும் பொருத்தமற்ற மெயில் முகவரிகளைத் தவிர்த்து, தற்போதைய விருப்பத்திற்கு ஏற்பப் புதிய பெயரில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்காக தனிப்பட்ட கூகுள் கணக்கு அமைப்புகளுக்கு சென்று (Google Account Settings), கிடைக்கக்கூடிய புதிய பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
விவரங்கள்
பழைய மெயில் ஐடி என்னவாகும்?
உங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றினாலும், பழைய முகவரி உங்கள் கணக்குடனேயே இணைக்கப்பட்டிருக்கும். எனவே, உங்கள் பழைய முகவரிக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பினாலும், அவை தடையின்றி உங்கள் புதிய முகவரியின் இன்பாக்ஸிற்கு வந்து சேரும். அதேபோல், உங்கள் பழைய முகவரியை வேறு யாரும் உரிமை கோர முடியாது. இதனால் பழைய தொடர்புகளை இழக்க நேரிடும் என்ற பயமின்றி பயனர்கள் தாராளமாகப் புதிய முகவரிக்கு மாறிக்கொள்ளலாம். தற்போது இந்த வசதி குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ இன்பாக்ஸ்
AI Inbox: உங்கள் மின்னஞ்சல்களை வரிசைப்படுத்தும் ஜெமினி
மின்னஞ்சல் முகவரி மாற்றத்துடன், ஜிமெயிலில் 'AI Inbox' என்ற புதிய வசதியையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் 'ஜெமினி' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வசதி, உங்கள் இன்பாக்ஸில் உள்ள குப்பைகளை (Clutter) நீக்கி, முக்கியமான மின்னஞ்சல்களுக்கு முன்னுரிமை அளிக்கும். குறிப்பாக, மின்சாரக் கட்டணம் செலுத்துதல் போன்ற அவசரமான மின்னஞ்சல்கள் தடிமனான எழுத்துக்களில் உரிய தேதியுடன் தனித்துக் காட்டப்படும்.
புதிய அம்சம்
முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்கும் புதிய அம்சம்
இந்த ஏஐ இன்பாக்ஸின் மற்றொரு சிறப்பம்சம் 'Topics to Catch Up On' என்பதாகும். இது உங்கள் பயண முன்பதிவுகள் (Travel Bookings) மற்றும் உணவக முன்பதிவுகள் (Restaurant Reservations) போன்ற தகவல்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு இடையே தேட வேண்டிய அவசியமின்றி, முக்கியமான பயணத் தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். தற்போது இந்த ஏஐ இன்பாக்ஸ் வசதி அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஜெமினி மூலம் மின்னஞ்சல்களை சுருக்கமாகப் (Summarize) பார்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.