Flights சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள்
குறைவான விலையில் விமான பயணங்களுக்கான முன்பதிவு செய்ய உதவும் வகையிலான புதிய வசதியை தங்களுடைய 'ஃபிளைட்ஸ்' சேவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இது குறித்த தகவல்களை தங்களுடைய வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம். முன்னதாக, நாம் முன்பதிவு செய்ய விரும்பும் விமானப் பயணத்திற்கான டிக்கெட் விலை குறைந்தால், அது குறித்து நமக்கு அலர்ட் செய்யும்படியான பிரைஸ் டிராக்கிங் வசதியையும், பிரைஸ் காரண்டீ என்ற வசதியையும் ஏற்கனவே அளித்து வந்தது கூகுள். தற்போது அத்துடன் கூடுதலாக நாம் முன்பதிவு செய்யும் பயணத்திற்கு, பொதுவாக எந்த எத்தனை நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால், குறைவான விலையில் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்த தகவல்களை வழங்கத் தொடங்கியிருக்கிறது கூகுள்.
ஃபிளைட்ஸ் சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் கூகுள்:
உதாரணத்திற்கு மதுரையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த பயணத்திற்கு பொதுவாக எத்தனை நாட்களுக்கு முன்பு டிக்கெட் விலை குறைவாக இருக்கும், தற்போது டிக்கெட் விலை எப்படி இருக்கிறது, மேலும் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்த தகவல்களை பயனாளர்களுக்கு புதிதாக வழங்கத் தொடங்கியிருக்கிறது கூகுள். இதனைத் தவிர்த்து, Price Guarantee என்ற வசதியை அமெரிக்காவின் சில விமான வழித்தடங்களில் மட்டும் வழங்கி வருகிறது கூகுள். அதாவது, ஒரு விமானப் பயணத்திற்கான விலை குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறையாது என திட்டவட்டமாகக் கூறுகிறது. விலை அதற்கும் மேல் குறையும்பட்சத்தில், அந்த விலை வேறுபாட்டிற்கான தொகையை கூகுள் பே மூலம் பயாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துவிடுமாம்.