கூகுள் I/O நிகழ்வு.. என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள்?
தங்களுடைய வருடாந்திர I/O நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இரண்டு மணி நேரம் நீடித்த அந்த நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது கூகுள். கூகுள் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டது என்பது சுருக்கமாக இதோ. கூகுள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக்ஸல் லைன்-அப்பில் ஒரு டேப்லட், ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு ப்ரீமியம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறது கூகுள். பிக்ஸல் 7a, பிக்ஸல் டேப்லட் மற்றும் பிக்ஸல் ஃபோல்டு ஆகிய மூன்று சாதனங்கள் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் தற்போது பீட்டா சோதனையில் இருக்கிறது. இந்த நிகழ்வில் அந்த இயங்குதளம் குறித்த மேலதிக தகவல்களைப் பகிர்ந்திருக்கிறது கூகுள். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இந்த இயங்குதளம் வெளியிடப்படலாம்.
AI அறிவிப்புகள்:
மேம்படுத்தப்பட்ட லாங்குவேஜ் மாடலான PaLM-2-வை இந்த I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். பார்டு AI-யானது இந்த லாங்குவேஜ் மாடலை அடிப்படையாகக் கொண்டே இயங்குவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. AI வசதியுடன் கூடிய புதிய வசதிகளை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். டெக்ஸ்ட்-டூ-இமேஜ் முறையில் AI மூலம் வால்பேப்பரை உருவாக்குவது உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. வியர் OS 4 குறித்த தகவல்களையும் இந்த I/O நிகழ்வில் பகிர்ந்து கொண்டிருக்கிறது கூகுள். இந்த ஆண்டு இறுதியில் அது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் வொர்க்ஸ்பேஸில் பயன்படுத்தும் வகையில் புதிய AI கருவிகளை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். ஆனால், அது அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படவில்லை.