ஏஐ மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்பாடு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றில் நிறுவனம் தனது கவனத்தை மாற்றுவதால் கூகுள் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிஎன்பிசி அறிக்கையின்படி, பணிநீக்கங்கள் மனிதவளத்துறை மற்றும் கிளவுட் பிரிவுகளை பாதிக்கும். சில பொறுப்புகள் இந்தியா மற்றும் மெக்சிகோ சிட்டிக்கு மாற்றப்படும்.
மனிதவள பிரிவில், அமெரிக்காவில் நடுத்தர முதல் மூத்த நிலை ஊழியர்களுக்கு கூகுள் ஒரு தன்னார்வ வெளியேறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் 14 வாரங்களுக்கான சம்பளத்தையும், ஒவ்வொரு வருட சேவைக்கு கூடுதல் வார ஊதியத்தையும் பெறுவார்கள்.
மார்ச் மாதத்தில் தொடங்கும் இந்த திட்டம், மனிதவள செயல்பாடுகளை நெறிப்படுத்துவதையும் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிளவுட் பிரிவு
வளர்ச்சியைக் கொண்ட கிளவுட் பிரிவில் மறுசீரமைப்பு
2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 30% வளர்ச்சியைக் கொண்ட, வருவாயைப் பெற்றுத் தரும் முக்கிய பிரிவான கிளவுட் பிரிவும் மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளது.
ஆபரேஷன்ஸ் உதவிப் பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, சில வேலைகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுகின்றன.
இருப்பினும், அமேசான் வலை சேவைகள் (AWS) மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூருக்கு எதிராக போட்டித்தன்மையைப் பராமரிக்க முக்கியமான விற்பனை மற்றும் பொறியியல் பிரிவுகளில் கூகுள் தொடர்ந்து புதியவரை பணியமர்த்தி வருகிறது.
இதற்கிடையே செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.