டிசம்பருக்குள் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம் உறுதி; இஸ்ரோ தலைவர் தகவல்
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார். "ககன்யான் ஏவுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை விண்ணில் செலுத்த முயற்சித்து வருகிறோம்," என்று சோமநாத் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த ஸ்பேஸ் எக்ஸ்போவை பார்வையிட்டபோது தெரிவித்தார். டிசம்பர் 2018 இல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ககன்யான் திட்டமானது, குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு மனித விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதையும், நீண்ட காலத்திற்கு இந்திய மனித விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களின் அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்திரயான் 4க்கான இன்ஜினியரிங் பணி முடிந்துவிட்டதாக அறிவிப்பு
சந்திரயான் 4 குறித்து சோமநாத் கூறுகையில், இந்த மிஷனுக்கான இன்ஜினியரிங் பணியை இஸ்ரோ முடித்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் கூறுகையில், "சந்திராயன் 4க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே அடுத்த சில மாதங்களில் புதுப்பிப்புகள் இருக்கும். இப்போது நாங்கள் இன்ஜினியரிங் பணியை முடித்துவிட்டோம். அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம், அதற்கு பல அடுக்கு ஒப்புதல்கள் உள்ளன. சந்திரயான் 3 அங்கு சென்று தரையிறங்கி உள்ளது. எனவே, இப்போது சந்திரனுக்கு சென்று திரும்புவது சந்திரயான் 4இல் திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான பணி என்பதால் அதிக காலம் எடுக்கும்." என்று கூறினார். இதற்கிடையே, 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தையும் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.