அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
திட்டமிட்டபடி அக்டோபர் 21 ஆம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பி, அவர்களை பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 21 ஆம் தேதி, ஏவுகணையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதில் பயணிக்கும் வீரர்களை(கிரேவ்) காப்பாற்ற கிரேவ் எஸ்கேப் சிஸ்டம்(Crew Escape System) முறையை சோதனை செய்ய இருக்கிறது. பூமியிலிருந்து ஏவப்படும் ஏவுகணை, 12-16 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, வீரர்கள் இருக்கும் பகுதி ஏவுகணையில் இருந்து பிரிக்கப்பட்டு கடலில் இறக்கி சோதிக்கப்படும்.
அடுத்தடுத்து ஏவுகணைகள் தேவைப்படும்- இஸ்ரோ தலைவர் சோம்நாத்
வரும் மாதங்களில் ஏவப்பட இருக்கும் ஏவுகணைகள் குறித்து பேசிய சோம்நாத், இனிவரும் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது ஒரு ஏவுகணையாவது ஏவப்படும் என கூறினார். பிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ககன்யான் ஆளில்லா சோதனை ஓட்டம் உள்ளிட்டதை வரும் மாதங்களில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் ஆதித்யா(சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஏவுகணை) ஏவுகணை செயல்பாடுகளை பற்றி பேசியவர், " ஆதித்யா-1 திட்டமிட்டபடி எல் 1 பாயிண்ட் நோக்கி நகர்ந்து வருகிறது." "ஜனவரி மாதத்தின் மத்தியில் ஆதித்யா வின்களம் நிலைநிறுத்தப்படும் எனவும்" தெரிவித்தார்.