சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 52 லட்சம் மொபைல் இணைப்புகளைத் துண்டித்திருப்பதாகவும், 8 லட்சம் வாலட் கணக்குகள் மோசடி செயல்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
இந்தியாவில் மோசடிச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 66,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இப்படி, சிம் கார்டுகளைக் கொண்டு செய்யப்படும் மோசடிகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்காக தற்போது புதிய விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்தியா
சிம் கார்டு மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை:
அதன்படி இனி சிம் கார்டுகளை விற்பனை செய்வர்களுக்கு காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
கடந்த மே 2023 முதல் மட்டும், 300 சிம் கார்டு விற்பனையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 67,000 டீலர்கள் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் இருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சிம் கார்டுகளை விற்பனை செய்யபவர்களுக்கு காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விதிமுறையானது, சிம் கார்டு மோசடிகளைத் சிறிதளவேனும் குறைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டு விற்பனையாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களது தகவல்களைச் சரிபார்க்க குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படவிருக்கிறது.