கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ்
சில தினங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடலை உலகமெங்கும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். புதிய ஐபோனை அறிமுகப்படுத்தியதற்கிடையில், ஆப்பிள் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்றான பிரான்ஸ். அந்நாட்டில் ரேடியோ அலைவரிசையை நிர்வகிக்கும் Agence Nationale des Fréquences (ANFR) கண்காணிப்பு அமைப்பானது, 2020ம் ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்திய ஐபோன் 12 வெளியிடும் SAR (Specific Absorption Rate) அளவானது, ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்திருக்கும் அளவை விட அதிகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிரான்ஸில் ஐபோன் 12ன் விற்பனையை நிறுத்துமாறும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டுக் கண்காணிப்பு அமைப்பு.
பிரான்ஸைப் பின்பற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்?
ஆப்பிள் நிறுவனத்தின் மீது மேற்கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாடு ஐபோன் 12 விற்பனையின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதைத் தொடர்ந்து, ஜெர்மனியும் பிரான்ஸின் பாதையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. ஸ்பெயினிலும் ஐபோன் 12ன் விற்பனையை நிறுவத்துவது குறித்து பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள். ஐரோப்பி நாடுகளின் இந்த முடிவால், ஆப்பிள் நிறுவனம் சரிவைச் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஆப்பிள் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பிரான்ஸ் டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் ஜீன்-நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.
ஏன் அதிக SAR அளவைக் கொண்டிருக்கிறது ஆப்பிள்?
கிலோவுக்கு 4.0W அளவையே அதிகபட்ச SAR வெளியீட்டு அளவாக நிர்ணயித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஆப்பிளின் ஐபோன் 12 ஸ்மார்ட்போனானது, கிலோவுக்கு 5.74W அளவைக் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறது பிரான்ஸின் அலைவரிசை கண்காணிப்பு அமைப்பு. ஆனால், தங்களுடைய ஐபோன் 12 வெளியிடும் SAR அளவு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்த அளவுக்குளேயே இருப்பதாகக் கூறி, அதனை தங்களுடைய ஆய்வகத்திலும், பிற மூன்றாம் தரப்பு ஆய்வகங்களிலும் சோதனை செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் மற்றும் பிற ஆய்வக சோதனைகளிலிருந்து, பிரான்ஸின் சோதனை முறை வேறுபாட்டினால் கூடுதலான SAR அளவு வெளியாவதாகக் காட்டப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், கூடுதலான SAR அளவைக் கொண்டிருப்பதாகக் கூறி முன்னதாக 42 முறை குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை பிரான்ஸில் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.