Page Loader
வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு
AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 05, 2023
10:39 am

செய்தி முன்னோட்டம்

வருமான வரித்துறையைத் தொடர்ந்து, இந்தியா கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் அமைப்பும் (CAG) பொய்யான பயனாளர்கள், தவறான பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். மனிதர்களால் எளிதில் செய்ய முடியாத வேலைகளைச் AI தொழில்நுட்பம் சுலபமாகச் செய்ய முடிவதனால், முன்பை விட மிகவும் துல்லியமாக, தவறான தகவல்களைக் கொடுப்பவர்களைக் கண்டறிய முடிவதாக தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற SAI20 மாநாட்டில், AI மற்றும் ML தொழில்நுட்பங்களை எப்படி தங்களது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது என்பதனை எடுத்துக்காட்டுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது, CAG அமைப்பு. அதிக அளவிலான தகவல் தளத்தைக் கொண்டு CAG அமைப்பின் புதிய AI கருவிகள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதால், 92% துல்லியமான முடிவுகளைக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

எப்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது? 

உதாரணத்திற்கு இந்தியாவில் மத்திய அரசு வழங்கும் ஒரு திட்டத்தை எடுத்துக் கொள்வோம். அந்தத் திட்டத்தில் ஒரு பயனாளர் இரண்டு முறை விண்ணப்பித்திருக்கிறாரா, போலியான கணினி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியிருக்கிறார்களா அல்லது சந்தேகப்படும்படியான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதா, என்பதனை கண்டறிய இந்த AI-க்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு நிதி சார்ந்த செயல்பாட்டிலும், லட்சக் கணக்கில் ஆவணங்களும், தகவல்களும் இருக்கும் வேளையில், அதனை ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் கருவிகள் நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று தான். இந்த AI கருவிகள் கண்டறியும் முடிவுகளிலும் தவறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, அவற்றை மட்டும் களப்பரிசோதனைக்கு உட்படுத்தி இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.