போன்பே, பேடிஎம் யுபிஐ செயலிகளுக்கு போட்டியாக super.money'ஐ களமிறக்கிய ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட் நிறுவனம் நிதி சார்ந்த தொழில்நுட்ப (Fintech) துறையில் மீண்டும் நுழைவதாக அறிவித்துள்ளது. இதற்கான super.money என்ற புதிய கட்டணச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் பயனர்கள் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பரிவர்த்தனைகளையும் கேஷ்பேக் வெகுமதிகளையும் பெறலாம். ஃபிளிப்கார்ட் தனது முந்தைய பேமெண்ட் தளமான போன்பேவில் (PhonePe) இருந்து பிரிந்து ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனியாக மீண்டும் கால்பதித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் செயலியின் பீட்டா வெர்சன் தொடங்கப்பட்டதிலிருந்து, super.money 10 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைக் குவித்துள்ளது. இந்த செயலி வரும் காலத்தில் போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஐந்து யுபிஐ கட்டண செயலிகளில் ஒன்றாக மாற இலக்கு
Super.money பயனர்களுக்கு ஒவ்வொரு வணிக பரிவர்த்தனையிலும் 5% வரை கேஷ்பேக் வழங்குகிறது. மேலும் மிந்த்ரா மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனத்திற்கு சொந்தமான தளங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். இந்தியாவின் தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் (NPCI) யுபிஐ (UPI) உள்கட்டமைப்புடன் இணைந்து, 'கிரெடிட் ஆன் யுபிஐ' அம்சத்தை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், குறிப்பாக 2 மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் உள்ளவர்களுக்கு அதிக தனிநபர் கடன்களை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, வரும் டிசம்பருக்குள் முதல் ஐந்து யுபிஐ கட்டண செயலிகளில் ஒன்றாக super.moneyஐ கொண்டுவருவதே இலக்கு என நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் சிகாரியா தெரிவித்துள்ளார்.