உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட வலைதளப்பக்கங்களைப் பயன்படுத்தி, இணையப்பயனாளர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்களைக் கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்.
(http://cbins/scigv.com) மற்றும் (https://cbins.scigv.com/offence) ஆகிய இணைப்புகளில் உச்சநீதிமன்றத்தின் பெயரால் செயல்படும் இணையப்பக்கங்கள் இரண்டுமே மோசடி இணையப்பக்கங்களே. இவற்றில், இணையப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
தினமும் உச்சநீதிமன்றத்தின் இணையப்பக்கங்களை உபயோகிப்பவர்கள் கூட கண்டறிய முடியாத வகையில், அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கத்தின் நகலாக போலியை வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆன்லைன் மோசடி
எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட உச்சநீதிமன்றம்:
பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அந்த அறிவிப்பில், (www.sci.gov.in) என்பது தான் அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கம் எனவும், இதனைத் தவிர்த்து பிற மோசடி இணையப்பக்கங்களில் தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது.
மேலும், உச்சநீதிமன்றத்திலிருந்து பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கித் தகவல்களையோ எந்தக் காரணம் கொண்டு கேட்க மாட்டோம் எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
இந்த ஆன்லைன் மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களுடைய பாஸ்வேர்டுகளை மாற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகக்கோரியும் தங்களுடைய அறிவிப்பில் அறிவுறுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.