
'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
செய்தி முன்னோட்டம்
69 பில்லியன் டாலர் மதிப்பில் ஆக்டிவிஷன் பிலிசார்ட்ஸ் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்துவதற்கு கடந்த மாதம் தடைவிதித்தது பிரிட்டனின் CMA அமைப்பு.
ஆனால், தற்போது அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்த கையகப்படுத்துதலுக்காக உலகம் முழுவதும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் மைக்ரோசாஃப்டிற்கு இது ஒரு ஆறுதலாக அமைந்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு பிற நாடுகளிலும் எதிரொலிக்குமா?
இந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தினை தடைசெய்ய அமெரிக்காவிலும் வழக்கு தொடர்ந்திருக்கிறது FTC. இந்த வழக்கானது தற்போது ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பதல் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்கா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் ஐபோப்பிய ஒன்றியத்தின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட்
என்ன பிரச்சினை?
ஆக்டிவிஷன் பிலிசார்ட்ஸ் நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கையகப்படுத்துவதன் மூலம் கன்சோல் மற்றும் கிளவுடு கேமிங் சந்தைகளில் போட்டியைக் குறைக்கும் என நினைக்கின்றன அந்தந்த நாட்டின் சந்தைப்போட்டி ஒழுங்குமுறை ஆணையங்கள்.
கன்சோல் கேமிங்கில் இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், கிளவுடு கேமிங்கில் இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தங்களது போட்டி நிறுவனங்களுடன் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை செய்வதாக மைக்ரோசாஃப்ட் உறுதியளித்திருப்பதையடுத்து இந்த கையகப்படுத்தலுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
ஆனால், மைக்ரோசாஃப்ட் குறிப்பிட்ட ஒப்பந்தங்களிலும் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறியே கடந்த மாதம் கையகப்படுத்தலுக்கு தடைவிதித்தது பிரிட்டனின் CMA.
CMA-வின் முடிவையடுத்து மேல்முறையீடு செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். எனினும், அந்த செயல்முறை முடிவடைய இன்னும் பல மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.