Loading...
விண்வெளியில் ஏஐ தரவு மையம்: 10 லட்சம் ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள்களை ஏவ எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்கு அனுமதி
10 லட்சம் ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள்களை ஏவ எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்கு அனுமதி

விண்வெளியில் ஏஐ தரவு மையம்: 10 லட்சம் ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள்களை ஏவ எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுக்கு அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
06:26 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களை அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்டார்மைண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சூரிய ஒளியின் சக்தியை பயன்படுத்தி செயற்கைக்கோள்களிலேயே ஏஐ தரவுகளை செயலாக்கி பூமிக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இது அமெரிக்காவின் அதிவேக நுண்ணறிவுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என ஆணையத்தின் தலைவர் பிரெண்டன் கார் வரவேற்றுள்ள நிலையில் அடுத்த ஆண்டே முதல் ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஸ்டார்லிங்க்

நவம்பர் 2038-க்குள் 50% செயற்கைக்கோள்கள் மற்றும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் இணைப்பு

அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உரிமத்தின்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நவம்பர் 2033-க்குள் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தத் தொடங்க வேண்டும்.

மேலும் நவம்பர் 2035-க்குள் 10% செயற்கைக்கோள்களும் நவம்பர் 2038-க்குள் 50% செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் செயல்படும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கை போலவே ஸ்டார்மைண்ட் செயற்கைக்கோள்களும் 500 முதல் 2,000 கிலோமீட்டர் உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கி ஸ்டார்லிங்க் வழியாகப் பூமிக்குத் தரவுகளை அனுப்பும்.

செலவு குறைப்பு

பூமியில் தரவு மையங்களுக்கான எதிர்ப்பும் செலவு குறைந்த விண்வெளி மாற்றும்

உலகளவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ளதால் தரவு மையங்களின் தேவையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால் பூமியில் அமைக்கப்படும் தரவு மையங்கள் அதிகப்படியான மின்சாரம் மற்றும் குளிரூட்டும் நீரை உறிஞ்சுவதால் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் பின்னடைவுக்கும் இது ஒரு காரணமாக அமைந்தது.

இதற்கு தீர்வாக கூகுள் மற்றும் புளூ ஆரிஜின் ஆகிய நிறுவனங்களும் விண்வெளித் தரவு மையங்களை ஆராய்ந்து வரும் நிலையில் விண்வெளித் தரவு மையங்களே குறைந்த செலவு மற்றும் ஆற்றல் திறன் கொண்ட சிறந்த வழி என ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமேசான் விமர்சனம்

அமேசான் விமர்சனமும் வானியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கையும்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தை நடைமுறைச் சாத்தியமற்ற உயர்ந்த கற்பனை எனப் போட்டி நிறுவனமான அமேசான் விமர்சித்துள்ளது.

அதேபோல் பெரிய மற்றும் அதிகப் பிரகாசம் கொண்ட 10 லட்சம் செயற்கைக்கோள்கள் இரவு வானில் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் வானியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் திறனை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க வானியல் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் விண்வெளியில் இருந்து மிகப்பெரிய அளவிலான தரவுகளைப் பூமிக்குக் கொண்டு வரும் லேசர் இணைப்புத் தொழில்நுட்பம் இன்னும் முழுமையடையவில்லை என்றும் குறைந்த சுற்றுப்பாதையில் விண்வெளிக் குப்பைகள் மற்றும் மோதல் அபாயம் அதிகரிக்கும் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT