செய்திப் பகிர்வுகள் மற்றும் செய்திகள் தொடர்பான புதிய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கும் எக்ஸ்
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டரை வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களைக் அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். கடந்த மாதம் அதன் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார் எலான் மஸ்க்.
தற்போது, செய்தி பகிர்வுகள் சார்ந்த புதிய மாற்றங்களை எக்ஸ் தளத்தில் மேற்கொண்டிருப்பதாக, மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி தற்போது ஒரு புதிய பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் எலான் மஸ்க்.
அந்தப் பதிவில், "நீங்கள், எழுத்தில் அதிக சுதந்திரத்தையும், அதிக வருவாயையும் எதிர்பார்க்கும் ஒரு பத்திரிகையாளராக இருந்தால், இனி நேரடியாக ட்விட்டரிலேயே வெளியிடுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம், நேரடியாக செய்திகளை வெளியிடும் வகையிலான புதிய வசதிகளை எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர்
எக்ஸில் மேற்கொள்ளப்படவிருக்கும் மற்றொரு மாற்றம்:
தற்போது எக்ஸில் செய்திகளின் லிங்க்கைப் பகிரும் போது, ஒரு புகைப்படத்துடன், குறிப்பிட்ட செய்தியின் தலைப்பும் கீழே இடம்பெற்றிருக்கும்.
ஆனால், இந்த வகையான வடிவமைப்பானது, எக்ஸின் மொபைல் செயலியின் திரையில் பெரும்பான்மையான இடத்தை எடுத்துக் கொள்வதாக கருதும் எலான் மஸ்க், இனி செய்திப் பகிர்வுகளில் தலைப்பு இடம்பெறாத வகையில் புதிய வடிவமைப்பை சோதனை செய்து வருவதாகத் தெரிகிறது.
பெரும்பாலான தலைப்புகள் க்ளிக்பெய்ட்களாகவும் இருப்பதனால், தலைப்பு இடம்பெறாத புதிய வடிவமைப்பு, பயனர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியாதவே இருக்கும் எனக் கருதுகிறார் எலான்.
ஒரு சிலர் இந்த முடிவை வரவேற்றிருக்கும் நிலையில், சிலர் எக்ஸில் அறிமுகமாகவிருக்கும் இந்த மாற்றத்தை விமர்சித்தும் வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு:
If you’re a journalist who wants more freedom to write and a higher income, then publish directly on this platform!
— Elon Musk (@elonmusk) August 21, 2023