மூன்று நிலை கட்டண சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் எக்ஸ்.. எலான் மஸ்க் பதிவு
எக்ஸ் தளத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து கட்டண சேவையின் கீழேயே கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். மேலும், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் புதிய எக்ஸ் பயனாளர்கள் பதிவுகள் இடுவதற்கே அடிப்படை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருக்கிறது எக்ஸ். எக்ஸ் தளத்தில் பாட்களின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு இந்தத் திட்டத்தை மேற்கூறிய நாடுகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது எக்ஸ். தற்போது அதனைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தின் கட்டண சேவையை மூன்று நிலைகளாகப் எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதனை தன்னுடைய பக்கத்திலும் பதிவாக இட்டிருக்கிறார் அவர்.
மூன்று நிலைகளாக எக்ஸ் கட்டண சேவை:
தற்போது வெளிநாடுகளில் 8 டாலர்கள் என்ற விலையில் கட்டண சேவையை வழங்கி வருகிறது எக்ஸ். அடுத்ததாக, குறைவான விலை, நடுத்தர விலை மற்றும் அதிக விலை கொண்ட மூன்று கட்டண சேவைகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது எக்ஸ். இவற்றில் குறைந்த விலை கொண்ட கட்டண சேவையானது தற்போது இருக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். ஆனால், அதோடு அதிகப்படியான விளம்பரங்களையும் கொண்டிருக்கும். விலை அதிகமான ப்ரீமியம் சேவையானது விளம்பரங்களற்ற பயன்பாட்டைக் கொண்டிருக்கும். இடைப்பட்ட நடுத்தர விலை கொண்ட சேவையானது குறைவான விளம்பரங்களைக் கொண்டிருக்கவிருக்கிறது. இந்த புதிய திட்டமானது எப்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என்பது குறித்த தகவல்களை எலான் மஸ்க் பகிர்ந்து கொள்ளவில்லை, விரைவில் அறிமுகமாகவிருக்கிறது என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.