பூமியின் மையக்கருவில் இருந்து கசியும் ஹீலியம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
பூமியின் மையக் கருவில் கசிவு ஏற்பட்டிருப்பதை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த வுட்ஸ் ஹோல் ஓசனோகிராஃபிக் இன்ஸ்டிட்யூஷன் மற்றும் கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை நேச்சர் இதழிலும் வெளியிட்டிருக்கிறார்கள். கனடாவின் பாஃபின் தீவுகளில் 62 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் ஹீலியம் 3 மற்றும் ஹீலியம் 4 ஐசடோப்புகள் அதிகளவில் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். பிரபஞ்ச அளவில் அதிகம் காணப்படக்கூடிய, அதேநேரம் பூமியில் மிக அரிதாக கிடைக்கக்கூடிய வாயுக்களில் ஒன்று ஹீலியம். பழமையான பாறை ஒன்றில் அதிகளவிலான ஐசடோப்புகள் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது என்ன?
பூமியின் மையர் பகுதியிலேயே மிக அதிகளவிலான ஹீலியம் வாயு அடைக்கப்பட்டிருக்கிறது. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது மைய கருவில் இடம்பெற்றிருந்த ஹீலியம் மற்றும் இன்னபிற வாயுக்களானது பூமியைச் ஒரு கோளாக உருவாகத் தொடங்கிய போது மையக் கருவுடன் சேர்த்து அடைக்கப்பட்டது. அப்படி அடைக்கப்பட்ட வாயுவானது மையக் கருவில் ஏற்பட்ட கசிவால், எரிமலைக் குழம்புடன் சேர்த்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு முன்னரும் இதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹீலியம் ஐசடோப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போதைய முடிவுகளையும் வைத்து பூமியின் மையக் கருவில் ஏற்பட்டிருக்கும் கசிவை உறுதி செய்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த கண்டுபிடிப்பால் என்ன பயன்?
பூமியின் மையக் கருவில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியமானது, இந்தப் பிரபஞ்சம் உருவான பிங் பேங் சமயத்திலேயே தோன்றியவை. மையக்கருவிலிருந்து வெளியேறிய ஹீலியம் மற்றும் அதன் ஐசடோப்புகள், அல்லது மையக்கருவில் இருந்து வெளியேறும் எந்தவொரு தனிமம் மற்றும் வாயுவையும் ஆராய்வதன் மூலம் அல்லது அது குறித்து தெரிந்து கொள்வதன் மூலம் பூமியின் தொடக்க காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமி எப்படி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமானது, பூமியில் உயிர்கள் எப்படி தோன்றியது போன்றவற்றுக்கான விடையைக் கண்டறிவதல் அடுத்த படியை அடைய இவை உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.