
நாளை சூரிய காந்தப் புயலை சந்திக்கவிருக்கும் பூமி.. இதனால் என்ன ஆபத்து?
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 16ம் தேதியன்று AR3467 என்ற சூரியபுள்ளியில் காந்தப்புல வெடிப்பு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த காந்தப்புல வெடிப்பானது சூரியனில் இருந்து கொரோனல் மாஸ் எஜெக்ஷன் ஏற்பட வழி வகுத்தது.
இந்த கொரோனால் மாஸ் எஜெக்ஷனானது நேரடியாக பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என நாசா தெரிவித்திருக்கிறது. எனினும், இந்த கொரோனால் மாஸ் எஜெக்ஷனின் ஒரு குறிப்பிட்ட பகுதியானது பூமியின் காந்த மண்டலத்துடன் தொடர்பு ஏற்படுத்தி, அதன் மூலம் சூரிய காந்தப் புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த அளவு தீவிரம் கொண்ட G1 வகை சூரிய காந்தப் புயலானது நாளை (அக்டோபர் 19) ஏற்படலாம் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
அறிவியல்
இந்த சூரிய காந்தப் புயலினால் நமக்கு ஆபத்தா?
சூரிய காந்த புயல்களானது நம்முடைய செயற்கைக்கோள்கள் மற்றும் பூமியில் தொலைத்தொடர்பு சாதனங்களை தாக்கி செயலிழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்தாண்டு பிப்ரவரி மாசம் ஏற்பட்ட சூரிய காந்த புயலினால் எலான் மஸ்க்குடைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 40 ஸ்டார்லிங்க் இணையதள செயற்கைகோள்கள் சேதமடைந்தன.
தீவிரத்தின் அடிப்படையில் சூரிய காந்தப் புயல்களானது G1 முதல் G5 வரையிலான எண்களால் குறிக்கப்படுகிறது. இவற்றில் G1 என்பவை தீவிரம் குறைந்த சூரிய காந்தப் புயல்களாகும்.
தற்போதைய கொரோனல் மாஸ் எஜெக்ஷனின் தாக்கத்தால் இந்த G1 வகையிலான சூரிய காந்தப் புயல்களே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது எனவும் கூறப்படுகிறது.