
பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தும் டிஸ்னி
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் தங்கள் பயனாளர்களின் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நெட்ஃபிலிக்ஸ், இந்தியாவிலும் கடந்த ஜூலை மாதம் பாஸ்வேர்டு பகிர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நெட்ஃபிலிக்ஸைத் தொடர்ந்து தற்போது டிஸ்னியும் தங்களுடைய டிஸ்னி+ சேவையில் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஆனால், இது இந்தியாவில் இல்லை, கனடாவில். ஆம், நவம்பர் 1ம் தேதி முதல் கனடாவில் உள்ள டிஸ்னி+ பயனாளர்களால், தங்களுடைய வீட்டைத் தவிர்த்து, வெளிநபர்களுடன் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
இதுகுறித்து பயனாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அனைத்துப் பயனாளர்களுக்கு நெட்ஃபிலிக்ஸைப் போலவே மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியிருக்கிறது டிஸ்னி.
ஓடிடி
இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா டிஸ்னி?
உலகிலேயே டிஸ்னி+ சேவையானது இந்தியாவிலேயே அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. எனவே, முதலில் பிற நாடுகளில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்தி அது வெற்றிகரமாக அமைந்தால் மட்டும் இந்தியாவிலும் அதனை டிஸ்னி+ அமல்படுத்தும்.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கண்டிப்பான முறையில் அதனை இந்தியாவில் இன்னும் அந்நிறுவனம் அமல்படுத்தவில்லை.
ஆனால், விரைவில் இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் டிஸ்னி ஈடுபடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் டிஸ்னியின் விதிமுறைகளையும் மீறி பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.