Wi-Fi சிக்னல்களை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) தலைமையிலான ஆராய்ச்சிக் குழு ஆற்றல் அறுவடை தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு பல்வேறு மின்னணு சாதனங்களில் பேட்டரிகளின் தேவையை அகற்றும். பொதுவாக "கழிவு" ஆற்றலாகக் கருதப்படும் சுற்றுப்புற ரேடியோ அலைவரிசை(RF) சிக்னல்களை, பயன்படுத்தக்கூடிய நேரடி மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றக்கூடிய ஒரு புதிய வகை ரெக்டிஃபையரை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அவர்களின் புதிய தொழில்நுட்பம், Wi-Fi மற்றும் செல்லுலார் நெட்வொர்க்குகளில் இருந்து கிடைக்கும் சுற்றுப்புற RF சிக்னல்களை பயன்படுத்தக்கூடிய மின்சாரமாக மாற்றுகிறது.
மின்னணு சாதனங்கள் இனி பேட்டரியை நம்பி இருக்க தேவையில்லை.
பேட்டரி சார்புநிலையை குறைத்தல், சாதனத்தின் ஆயுளை நீட்டித்தல், சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைத்தல், அடிக்கடி பேட்டரியை மாற்ற முடியாத பகுதியில் இருப்பவர்களுக்கு வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க்குகளை வழங்குதல், IoT சாதனங்களின் சாத்தியக்கூறுகளை மேம்படுத்துதல் ஆகியவை இதனால் சாத்தியப்படும் என்று RF ஆற்றல் அறுவடை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கும் குழு தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தை அடைய நானோ அளவிலான ஸ்பின்-ரெக்டிஃபையர்களை (SR) பயன்படுத்தலாம் என்பதை இந்த் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. -20 dBm க்கும் குறைவான RF சக்தி நிலைகளில் கூட அதை செய்யலாம் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இது தற்போதுள்ள தொழில்நுட்பங்களால் அடைய முடியாத ஒரு வரம்பாகும்.