பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!
உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் சாட்ஜிபிடி போன்ற, ஆனால் தங்கள் தகவல்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையைத் தேடி வருகின்றன. இது AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ மற்றும் கூகுளைக் கடந்து, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அந்தப் பாதையில் தற்போது பயணிக்க முடிவு செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக புதிதாக 1,300 மென்பொருள் பொறியாளர்களை பணியில் அமர்த்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் அதிக பணியாளர்களை பணியில் அமர்த்துவது இதுவே முதல்முறை, எனத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜோசப் அனந்தராஜூ.
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் சேவை:
கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும், அவர்களது சேவையை டிஜிட்டல்மயமாக்க உதவி செய்யும் நிறுவனம் தான் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ். அந்நிறுவனமானது AI மூலம் பெறக்கூடிய வருவாய் மிகவும் குறைவு என்றாலும், வேகமாக வளர்ந்து வரும் துறை என்பதால், அதில் தற்போது முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ். சாட்ஜிபிடியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். சாட்ஜிபிடியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கருவிகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கி அளிப்பது தான் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் வேலை. இதன் மூலம், சாட்ஜிபிடியிடம் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரம், அந்த AI சேவையையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.