LOADING...
C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
நாளை சூரியனை நெருங்கும் 'C/2026 A1 MAPS' வால்நட்சத்திரம்

C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் 'Comet C/2026 A1 MAPS' என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது. இந்த ஆண்டின் வால்நட்சத்திரம் என்று அழைக்கப்படும் இது, நாளை சூரியனுக்கு மிக அருகில் செல்லும் 'Perihelion' நிலையை எட்ட உள்ளது. சூரியனை உரசிச் செல்லும் 'சன்கிரேசர்' வகையை சேர்ந்த இந்த வால்நட்சத்திரம், சூரியனின் அதீத வெப்பத்தைத் தாங்கி உயிர் பிழைக்குமா என்பதே விஞ்ஞானிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

விவரங்கள்

வால்நட்சத்திரம் மேப்ஸ்: ஒரு சிறு அறிமுகம்

ஜனவரி 13, 2026-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால்நட்சத்திரம், பிரபலமான 'க்ரூட்ஸ்' (Kreutz) வால்நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்தது. சூரியனுக்கு மிக அருகில், அதாவது அதன் மேற்பரப்பில் இருந்து வெறும் 1.6 லட்சம் கி.மீ தூரத்தில் இது கடந்து செல்ல உள்ளது. சூரியனின் ஈர்ப்பு விசை மற்றும் வெப்பம் காரணமாக இதன் பனிப்படலம் உருகி, நீண்ட பிரகாசமான வால் போன்ற அமைப்பை உருவாக்கும். இது உயிர் பிழைக்கும் பட்சத்தில், பல தசாப்தங்களில் காணாத ஒரு பிரம்மாண்ட வானியல் காட்சியை நாம் காண முடியும்.

காட்சி

இந்தியாவில் எப்போது, எங்கே பார்க்கலாம்?

இந்தியாவில் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த வால்நட்சத்திரத்தைக் காண்பதற்கான வாய்ப்புகள் ஓரளவிற்குத் தென்படுகின்றன. சிறந்த நேரம்: ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரை. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 30 முதல் 45 நிமிடங்கள் வரை இதைக் காண முயற்சிக்கலாம். திசை: மேற்கு - தென்மேற்கு திசையில், அடிவானத்திற்கு (Horizon) சற்று மேலே இதைக் காணலாம். இடம்: தென்னிந்தியா (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா) பகுதிகளில் இதைக் காண்பதற்கான வாய்ப்புகள் வட இந்தியாவை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் இங்கு அடிவானம் சற்று உயரமாகத் தெரியும்.

Advertisement

டிப்ஸ்

பார்ப்பதற்கான டிப்ஸ்

1. வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?: சூரியனைக் கடக்கும்போது இதன் பிரகாசம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சூரியனின் வெளிச்சம் அதை மறைக்கக்கூடும். ஏப்ரல் 6-க்குப் பிறகு இது சூரியனை விட்டு விலகும்போது வெறும் கண்ணால் பார்க்கும் அளவிற்குப் பிரகாசமாக மாறலாம். 2. கருவிகள்: ஒரு சிறிய பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் வைத்திருந்தால் வால்நட்சத்திரத்தின் வாலைப் மிகத் தெளிவாகக் காண முடியும். 3. தடை: மேகமூட்டம் மற்றும் நகரங்களில் உள்ள ஒளி மாசுபாடு இதைப் பார்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம். மொட்டை மாடிகள் அல்லது வெளிச்சம் குறைவான திறந்தவெளிகளில் இருந்து பார்ப்பது சிறந்தது.

Advertisement