
உலகளவில் திடீரென முடங்கிய சாட்ஜிடிபி; 30 நிமிடங்களில் சேவையை மீட்டதாக ஓபன்ஏஐ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஓபன்ஏஐ நிறுவனந்த்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான சாட்ஜிபிடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று உலகளவில் சிலருக்கு தற்காலிகமாக செயலிழந்தது.
இதனால் அதன் ஆப் மற்றும் ஏபிஐ சேவைகள் இரண்டும் பாதிக்கப்பட்டன. ஏஐ மாடலின் சமீபத்திய அப்கிரேடைத் பயன்படுத்தி ஸ்டுடியோ கிப்லி-பாணி அனிமேஷன் படங்களை உருவாக்க முயற்சிக்கும் பயனர்களையும் இந்த சிக்கல் பாதித்தது.
இந்நிலையில், 30 நிமிடங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐந்து வேலை நாட்களுக்குள் செயலிழப்பு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று நிறுவனம் பயனர்களுக்கு உறுதியளித்தது.
இதற்கிடையே, DownDetector, இந்த செயலிழப்பால் குறைந்தது 229 பயனர்கள் சேவை இடையூறுகளை பெற்றதாக தெரிவித்துள்ளது.
ஸ்டுடியோ கிப்லி
வரவேற்பைப் பெற்ற ஸ்டுடியோ கிப்லி-பாணி அனிமேஷன் படங்கள்
சாட்ஜிபிடியின் சமீபத்திய அப்டேட் மூலம், ஸ்டுடியோ கிப்லி-பாணி படங்களை உருவாக்கும் திறனுக்காக பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
Spirited Away மற்றும் My Neighbour Totoro போன்ற கிளாசிக் படங்களுக்கு பெயர்பெற்ற புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்பட தயாரிப்பாளர் ஹயாவோ மியாசாகியின் கையால் வரையப்பட்ட அனிமேஷன் பாணியால் ஈர்க்கப்பட்ட காட்சிகளை உருவாக்க இந்த அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.
தேவை அதிகரித்து வரும் நிலையில், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், எக்ஸ் தளத்தில் இதுகுறித்து நகைச்சுவையாக, "படங்களை உருவாக்குவதில் நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்க முடியுமா? இது பைத்தியக்காரத்தனம் - எங்கள் குழுவிற்கு தூக்கம் தேவை" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஓபன்ஏஐ தொடர்ந்து செயல்பட போராடி வருவதாக அவர் கூறியுள்ளார்.